நல்ல நேரத்தை தவறவிட்டதால் வேட்பு மனு தாக்கலை நாளைக்கு ஒத்திவைத்த பா.ஜ.க. தலைவர்

விஜய் முகூர்த்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் அல்லது தொடங்கும் எந்தவொரு பணியும் வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகிறார்கள்.

Update: 2024-04-18 12:06 GMT

நவ்சாரி:

குஜராத் மாநிலம் நவ்சாரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான சி.ஆர்.பாட்டீல் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக கலெக்டர் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் வாகனத்தில் பேரணியாக வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு தொண்டர்கள் திரண்டனர். வாகனம் மிக மெதுவாகவே வந்தது. இதனால் அவர் மனு தாக்கல் செய்வதற்கு குறித்து வைத்திருந்த விஜய் முகூர்த்த நேரத்திற்குள் கலெக்டர் அலுவலகத்திற்கு வர முடியவில்லை.

நல்ல நேரத்தை தவறவிட்டதால் இன்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. நாளை அதே விஜய் முகூர்த்த நேரமான, மதியம் 12.39 மணிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

இவரைப் போன்று பல வேட்பாளர்கள் நாளை (ஏப்ரல் 19) மதியம் 12.39 மணிக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய விரும்புகிறார்கள். இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் அல்லது தொடங்கும் எந்தவொரு பணியும் வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகிறார்கள்.

மே 7-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் குஜராத் வருகிறது. மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் குஜராத்தின் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. குறிப்பாக, 2019 தேர்தலில் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பட்டேலை 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்