குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் என பா.ஜ.க. தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-24 13:35 GMT

கோவை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், கோவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்காக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவை சரவணப்பட்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ஏப்ரல் 10ம் தேதி அ.தி.மு.க. - தி.மு.க. ஒன்றாக சேருவார்கள். தேர்தலுக்கு முந்தைய கடைசி 10 நாட்களில் அ.தி.மு.க. - தி.மு.க ஒன்று சேர்வதை நான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் பங்காளி கட்சிகளின் சுயரூபத்தை பார்ப்பீர்கள்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தேர்தலில் நிற்பது கம்யூனிஸ்டு கட்சி வேண்டாம் தி.மு.க. வரவேண்டும் ஏன்? பணபலம், படைபலத்தை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்பது, இல்லையென்றால் கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வினருக்கு இங்கு என்ன வேலை. அதேபோல் அ.தி.மு.க.வினரும் ஏன் சுற்றி சுற்றி வருகின்றனர்.

ஏப்ரல் 10ம் தேதிக்கு மேல் அ.தி.மு.க. , தி.மு.க. வேட்பாளர்களில் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து இன்னொரு வேட்பாளரை நிறுத்தி வாக்கை மாற்ற (டிரான்ஸ்பர்) முயற்சிப்பார்கள், இதை கேரளாவில் பார்த்துள்ளோம். தமிழ்நாட்டு அரசியலில் முதல் முறையாக அது கோவையில் நடக்கும். அதையெல்லாம் தாண்டி பா.ஜ.க. வெற்றிபெறும்.

மக்களுடைய அன்பு நம்மிடம் இருக்கும்போது பங்காளி கட்சிகள் என்னவேண்டுமானால் உடன்படிக்கை செய்துகொள்ளட்டும், திரைமறைவில் பேசிக்கொள்ளட்டும், விட்டுக்கொடுத்துக்கொள்ளட்டும். இதற்கெல்லாம் கோவை மக்கள் மயங்கப்போவல்து கிடையாது. அதற்கு நாங்கள் பயப்படப்போவதும் கிடையாது.

இவர்கள் யாரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் எல்லாம் பணத்தை கொள்ளையடித்து அதில் இரு குழுக்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்பவர்கள்.

இவர்கள் எல்லோரும் 5 ஆண்டுகள் மந்திரியாக இருந்துள்ளனர், சம்பாதித்துவிட்டனர், அடுத்த 10 ஆண்டுகள் செலவு செய்வார்கள். 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சம்பாதிப்பார்கள். இவர்கள் எல்லாம் பழைய தலைவர்கள் கிடையாது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 சதவிகிதம் கமிஷனாக கொள்ளையடிக்கின்றனர். அதில் வந்த பணத்தை வைத்துக்கொண்டு பேசுகின்றனர். இவர்கள் கோவையில் என்ன அடிப்படை மாற்றம் கொண்டுவந்துள்ளனர். கோவை சூடானதுதான் மிச்சம். குளுமையாக அமைதியாக இருக்கக்கூடிய கோவையில் இன்று 2 டிகிரி, 3 டிகிரி வெப்பநிலை ஏற்றியுள்ளனர். இதற்கு திராவிட கட்சிகளே காரணம். கோவையில் இருசக்கர வாகனத்தில் செல்லமுடியவில்லை. மாஸ்க் இல்லாமல் இருக்க முடியவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்