நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைக்குரலாக அ.தி.மு.க. ஒலிக்கும் - எடப்பாடி பழனிசாமி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2024-04-17 11:37 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார். அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்- பதில் சொல்ல முடியாமல் நழுவினார். இப்போது எஜமானர்களாம் உங்களிடமே வந்தேன்- 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் நம் கேள்விகளை உரக்கக் கேட்டேன்- பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம்தான் வைத்தார்.

மு.க.ஸ்டாலின் என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா? இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஒரு ஆட்சிதான் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி.

ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான எம்.பி. நிவாரண நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த தி.மு.க. கூட்டணி எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பா.ஜனதா அரசு மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பா. ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஈடேறாது. அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே- வரும் 19ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் தி.மு.க.விற்கு வாக்களிப்பதும், பா.ஜ.க.,வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்.பி.க்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த தி.மு.க.,வையும் ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம். அ.தி.மு.க. தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்- புரட்சித்தலைவி அம்மா ஆகிய திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் ஆளுமைகள் கட்டமைத்த வளமிக்க தமிழ்நாட்டை, சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகிய கொள்கை நெறிகொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சிசார் பாதையில் வழிநடத்த உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டைஇலை சின்னத்திலும் முரசு சின்னத்திலும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்