முடிவுக்கு வருமா மோதல்? - டாக்டர் ராமதாசுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

டாக்டர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசி வருகிறார்.

Update: 2024-12-29 08:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து ராமதாஸ் கேட்டறிந்து வந்தார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார். இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து தலைவர் அன்புமணி ராமதாசுக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த டாக்டர் ராமதாஸ், "இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்" என்று அவர் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறி விட்டு மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார். டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கருத்து முரண்பாடு ஏற்பட்ட நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி சந்தித்து பேசி வருகிறார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் கட்சி நிர்வாகிகள் இல்லாமல் தனியாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் பேசி முடித்தவுடன் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்