வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
தேனி,
வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் இன்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனத்துக்கான தண்ணீர் மற்றும் குடிநீருக்கு என 2219 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் இரு புறங்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர். அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.