விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்மா உணவங்களின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-01 08:17 GMT

சென்னை,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பாய்ந்து ஓடியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் செல்வி நகரில் மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்தும், மழை நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்து விட்டது. தற்போது புயல் காலத்திலும் தலைநகர் சென்னை நிம்மதியாக இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் மழை விடவில்லை. விழுப்புரம், திண்டிவனம், மயிலம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி அங்கிருந்து பணிகளை கவனித்து வருகிறார்.

விழுப்புரம், கடலூரில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த மின்சாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி உள்ளேன். மூத்த அதிகாரிகள் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரையும் அனுப்பி உள்ளோம். துணை முதல்-அமைச்சர் உதயநிதியும் அங்கு செல்கிறார். அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது மழை பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களின் நிலையை தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். விழுப்புரத்தில் 3 அமைச்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் 26 முகாம்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

சென்னையில் 32 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மா உணவங்களின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது.

மழைநீர் தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. சென்னையில் 21 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக நடைபெறுகிறது. 9.10 லட்சம் உணவுப் பொட்டலங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. அம்மா உணவகம் மூலம் நேற்று 1.07 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மழைநீர் வடிந்த உடன் பயிர்சேதம் கணக்கெடுக்கப்படும். தேவைப்படும் போது நானும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்வேன். மத்திய குழு தமிழகத்தை பார்வையிட வேண்டும். விழுப்புரம், கடலூர் மாவட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்