வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கையை தி.மு.க. அரசு முடக்குகிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
கிராமப்புற மக்கள் முதியோர் உதவித் தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், விவசாய மானியம் போன்றவற்றை பெறுவதற்காக அவர்களுக்கு வங்கிக் கணக்கு துவக்குதல், வங்கியிலிருந்து பணத்தை எடுத்துத் தருதல், புதிய கடன் பெற்றுத் தருதல், நகைக் கடன் பெற்றுத் தருதல் போன்ற சேவைகளை வங்கி வணிக தொடர்பாளர்கள் மேற்கொண்டு வந்தனர். கொரோனா காலத்தில், தங்களின் உயிரை துச்சமென மதித்து கிராமப்புற ஏழையெளிய மக்களுக்காக பணியாற்றியுள்ளனர். மேற்படி வங்கி வணிக தொடர்பாளர்கள் வங்கிகளின் நோடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தபோது, ஒரு முதியோர் ஓய்வூதியத் தொகைக்கு 30 ரூபாய் கமிஷன் வங்கிகளுக்கு தரப்பட்டது. இதில், வங்கி கமிஷன் 6 ரூபாய் போக மீதமுள்ள 24 ரூபாயை வங்கி வணிக தொடர்பாளர்கள் பெற்று வந்தனர். இந்தப் பணியை மேற்கொள்வதற்காக கணினி, அச்சு இயந்திரங்களை தங்கள் சொந்த செலவில் வாங்கி, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து. அதற்கான மின் கட்டணத்தையும் செலுத்தி வந்தனர்.
சிறிது காலத்திற்குப் பிறகு, மேற்படி பணியை ஒப்பந்த அடிப்படையில் வங்கிகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதன் காரணமாக, வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த வங்கி வணிக தொடர்பாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றப்பட்டனர். இதனையடுத்து அவர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகை 15 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதாவது. மொத்தமுள்ள 30 ரூபாயில், வங்கிக்கு 6 ரூபாயும், தனியார் நிறுவனத்திற்கு 9 ரூபாயும் போக மீதமுள்ள 15 ரூபாய் வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு கமிஷனாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய ஒரு முதியோர் ஓய்வூதியத் தொகைக்கு 30 ரூபாய் கமிஷனை செப்டம்பர் மாதம் முதல் இதுநாள் வரை, அதாவது கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு அரசு அளிக்காததன் காரணமாக, வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான கமிஷளை வங்கிகள் அரிக்கவில்லை. இதன் காரணமாக, கிராமப்புற மக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றிக் கொண்டிருக்கிற வங்கி வணிக தொடர்பாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இருக்கின்ற வேலைக்கு வேட்டு வைப்பது எவ்விதத்தில் நியாயம் என்பதை தி.மு.க. அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி செப்டம்பர் மாதம் முதல் இதுநாள் வரையுள்ள நிலுவைத் தொகையினை வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு வழங்கவும், இனி வருங்காலங்களில் கமிஷன் தொகை தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .