புத்தாண்டு, பொங்கல் பண்டிகை: உப்பள்ளி - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இயக்கம்
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி உப்பள்ளி - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக உப்பள்ளி-கன்னியாகுமரி-உப்பள்ளி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07367) நாளை (திங்கட்கிழமை), அடுத்த மாதம் (ஜனவரி) 6 மற்றும் 13-ந்தேதிகளில் (3 பயணம்) உப்பள்ளியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 3.20 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
மறுமார்க்கமாக கன்னியாகுமரி - எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு ரெயில் (07368) வருகிற 31-ந்தேதி, அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் (3 பயணம்) கன்னியாகுமரியில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.35 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.