அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5-ம் தேதி தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தேர்வு தேதி மாற்றப்பட்டதற்குரிய அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2024-11-29 13:11 GMT

சென்னை,

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மருத்துவத்துறை பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-

"மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக இருக்கின்ற மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 1,021 மருத்துவர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நிரப்பப்பட்டது. அந்தவகையில் நடப்பாண்டில் எதிர்வரும் 2026 வரையிலான காலிபணியிடங்கள் (Arraising Vacanty) ஒட்டுமொத்தமாக 2,553 என்கின்ற வகையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் 2,553 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு 23,971 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். மேலும் இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வுகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த 23,971 பேருக்கு தேர்வு நடத்துவது என்பது பெரிய நிறுவனங்களால் மட்டுமே முடியும் என்கின்ற வகையில், ஒரு பெரிய நிறுவனத்தோடு பேசி, தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. 27.01.2025 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் இந்த தேர்வு தேதியை முன்கூட்டியே நடத்தி பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், அதற்கேற்றவாறு அந்நிறுவனத்துடன் பேசி 05.01.2025 என்று தேர்வு தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதற்குரிய அறிவிப்பாணை (Notification) இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தேர்வு முடிந்தவுடன் விரைந்து தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்வதற்கு கூடுதல் பணியாளர்களை மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்திற்கு (MRB) தந்து உடனடியாக பணி நியமனம் செய்தவற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்