பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-11 16:32 GMT

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அருகே நல்லவாடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55).இவரது மனைவி கெங்கையம்மாள் (50). இவர் தனது வீட்டின் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்வீட்டை சேர்ந்த நித்தீஷ், முன்விரோதம் காரணமாக கெங்கையம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்வது குறித்து கேட்டுள்ளார்.

இதனை கெங்கையம்மாள் தட்டிக்கேட்டபோது அவரை, நித்தீஷ் தனது கையில் வைத்திருந்த சவுக்கு தடியால் தலையில் தாக்கியுள்ளார். மேலும் அவரது மனைவி கோமதி, மற்றும் அண்ணன் மகன் தமிழ்வாணன் ஆகியோரும் கெங்கையம்மாளை கீழே தள்ளி வயிற்றிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், எங்களிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் குடும்பத்தோடு எரித்து கொலை செய்து விடுவோம் என மூவரும் மிரட்டல் விடுத்துள்ளனராம்.

இதில் பலத்த காயமடைந்த கெங்கையம்மாளை புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் நித்தீஷ், அவரது மனைவி கோமதி மற்றும் தமிழ்வாணன் ஆகிய மூவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்