காரைக்கால் கார்னிவல் விழா நிறைவு

காரைக்காலில் கார்னிவல் விழா நிறைவு நாளில் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-01-18 17:50 GMT

காரைக்கால்

காரைக்காலில் கார்னிவல் விழா நிறைவு நாளில் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு விழா

காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், புதுச்சேரி சுற்றுலாத்துறையும் இணைந்து காரைக்காலில் கடந்த 15-ந் தேதி முதல் கார்னிவல் திருவிழாவை நடத்தி வருகிறது. 4-ம் நாளான இன்றுடன் விழா நிறைவு பெற்றது.

முன்னதாக காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம் நடந்தது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஆன்மிக பூங்காவில் இருந்து அரசு விளையாட்டு மைதானம் வரை, 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சைக்கிள் பந்தயம்

19 வயதிற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சைக்கிள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டார்கள். திருநள்ளாறு சாலை வழியாக, காமராஜர் சாலை, பி.கே.சாலை, சி.ஆர்.சி வழியாக சென்று, பைபாஸ் சாலையில் உள்ள அரசு மைதானத்தில் போட்டி நிறைவு பெற்றது. இப்போட்டியில் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாணவர்கள் பிரிவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பள்ளி மாணவன் மோனிஷ் முதல் இடத்தையும், தருமபுரம் எஸ்.ஆர்.வி.எஸ் நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி மாணவன் அப்துல்லா 2-ம் இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில், நிர்மலா ராணி பள்ளி மாணவி மெர்சி கிரேட் முதல் இடத்தையும், திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி மகாலட்சுமி 2-ம் இடத்தையும் பிடித்தனர். மேலும் 2 மாணவர்களுக்கு 3-ம் பரிசும், 10 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்க தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

கபடி போட்டி

முன்னதாக காரைக்கால் காமராஜர் திடலில், கார்னிவல் விழாவின் இறுதி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா துவக்கி வைத்தார். மாவட்ட கபடி சங்க தலைவர் சோழசிங்கராயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போட்டியில் காரைக்கால் மேடு மற்றும் கீழஓடுதுறை அணிகள் கலந்து கொண்டன. முடிவில், கீழ ஓடுதுறை அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. 2-ம் இடத்தை காரைக்கால் மேடு அணி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்