கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு
ஏனாம் மழை, வெள்ள சேதம் குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கவர்னரை வரவேற்பதில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
புதுச்சேரி
ஏனாம் மழை, வெள்ள சேதம் குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கவர்னரை வரவேற்பதில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
ஏனாமில் வெள்ளம்
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, புதுச்சேரி மாநிலமான ஏனாமில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகளுக்குள் 5 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் வல்லவன் ஏனாமில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை கவனித்து வருகிறார். புதுவை அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 25 கிலோ இலவச அரிசி வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
கவர்னர் ஆய்வு
இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார் ஆகியோர் ஏனாம் சென்றனர். அங்கு மண்டல நிர்வாக அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கொல்லப்பளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், நிர்வாக அதிகாரி அமன் சர்மா, கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், வெள்ள பாதிப்புகளையும் படக்காட்சிகள் மூலம் கவர்னருக்கு அதிகாரிகள் விளக்கினார்கள். அதன்பின் வெள்ளம் பாதித்த தரியால்திப்பா பகுதியை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
முதலுதவி பொருட்கள்
மேலும் பரம்பேட்டா பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்டு அங்கு தங்கி இருந்தவர்களுக்கு மருத்துவ முதலுதவி பொருட்களை வழங்கினார்கள். பின்னர் பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு மற்றும் மருத்துவம் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மோதல்- தடியடி
முன்னதாக ஏனாம் சென்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரவேற்பு அளிக்க கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவின் ஆதரவாளர்கள் தனித்தனியே திரண்டிருந்தனர். அவர்களில் யார் முதலில் கவர்னருக்கு வரவேற்பு அளிப்பது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதம், கைகலப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு அணி வகுப்புக்காக வந்து இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், அங்கு 30 நிமிடம் சலசலப்பு ஏற்பட்டு அமைதி திரும்பியது.
கவர்னரை வரவேற்பதில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ. சீனுவாஸ் அசோக் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டது, போலீஸ் தடியடி சம்பவம் ஏனாமில் பரபரப்பை ஏற்படுத்தியது.