மாணவர் சேர்க்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
புதுவையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகவும், பெற்றோர்களுக்கு அரசுப்பள்ளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காவும், அரசுப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் (பெண் கல்வி) சிவராமரெட்டி, கொஞ்சுமொழி குமரன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் குலசேகரன், குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பாரதியார், நேரு, தமிழ்த்தாய் உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடங்களை அணிந்து ஊர்வலமாக சென்றும், பொம்மலாட்டம் மூலமும் நகரப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அரசுப்பள்ளிகளின் சிறப்புகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினா். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமக்ர சிக்ஷா அதிகாரிகள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.