ஞாபக மறதி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு துரதிருஷ்டவசமானது - மத்திய அரசு
ஞாபக மறதி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு துரதிருஷ்டவசமானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சில தினங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியபோது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் போல் இந்தியாவின் பிரதமர் மோடிக்கும் ஞாபக மறதி பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சு துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது;-
"நீண்ட கால ஒற்றுமை, விடாமுயற்சி, பரஸ்பர மரியாதை மற்றும் இரு தரப்பு அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் கட்டமைக்கப்பட்ட பண்முக கூட்டாண்மையை அமெரிக்காவுடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இந்த சூழலில் இதுபோன்ற பேச்சுகள் அல்லது அறிக்கைகள் வருவது துரதிருஷ்டவசமானது. இது இருநாடுகளுக்கு இடையிலான அன்பு மற்றும் நட்புறவுடன் ஒத்துப்போகவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.