ராகுல் காந்தியின் குடியுரிமை வழக்கு.. மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? டெல்லி ஐகோர்ட்டு கேள்வி

சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-12-06 10:58 GMT

புதுடெல்லி:

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் பாஸ்போர்ட் விசாரணையின்போது தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்பதை பிரிட்டிஷ் அரசிடம் வெளிப்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி கடந்த 2019 ஆகஸ்ட் 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

'ராகுல் காந்தி இந்திய குடிமகனாக இருந்துகொண்டு இந்திய அரசியலமைப்பின் 9-வது பிரிவை மீறியதால் அவரது இந்திய குடியுரிமை ரத்தாகிவிடும, அவர் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டார். எனது புகாரின் நிலை குறித்து அறிவதற்காக அமைச்சகத்திடம் பல முறை கடிதம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை' என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்கும்படி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலில் மனு மீது நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று, அதன்பின்னர் வழக்கு தொடர்பான நடைமுறைளை தொடர நீதிபதிகள் விரும்பினர்.

ஆனால், இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் இதற்கு முன்பு ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதால், புதிய வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் வழங்கும்படி, மத்திய அரசின் சார்பில் ஆஜரான தற்காலிக வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

'இந்த வழக்கு தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன் அரசுத்தரப்பு வழக்கறிஞரின் ஆலோசனை மற்றும் உதவியை பெற விரும்புகிறோம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தாக்கல் செய்யுங்கள்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்