பைக்கில் கொண்டு சென்ற வெடிப்பொருள் வெடித்து சிதறி விபத்து - இளைஞர் பலி
பைக்கில் கொண்டு சென்ற வெடிப்பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் சல்டொரா மாவட்டம் ஜன்கா கிராமத்தை சேர்ந்த இளைஞர் நேற்று இரவு பெங்குரா மாவட்டத்தில் இருந்து பைக்கில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இளைஞர் பயணித்த பைக் தீ பற்றி எரிந்தது. சட்டவிரோத குவாரிக்கு பயன்படுத்துவதற்காக இளைஞர் பைக்கில் வெடிபொருட்களை கொண்டு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக வெடிப்பொருள் வெடித்து சிதறி பைக்கும் தீ பற்றியது. இச்சம்பவத்தில் பைக்கில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இளைஞரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.