குஜராத்தில் 'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ஒரு கோடி ரூபாயை இழந்த 90 வயது முதியவர்

'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் முதியவர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

Update: 2024-11-29 13:03 GMT

காந்திநகர்,

இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதனை நம்பி பயந்து போனவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழக்கின்றனர்.

அந்த வகையில், இந்த மோசடி கும்பலிடம் 90 வயது முதியவர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த ஒரு கோடி ரூபாயை இழந்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று கூறியதோடு, முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். இதனிடையே, முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர்.

இதன் பின்னர் முதியவரின் குடும்பத்தினர் இது தொடர்பாக சூரத் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே சமயம், இந்த மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட பார்த் கோபானி என்ற நபர் கம்போடியா நாட்டிற்கு தப்பியோடிவிட்டதாகவும், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்