குரூப்-1 மெயின் தேர்வு- இன்று தொடங்குகிறது
துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் (16 இடங்கள்), போலீஸ் டி.எஸ்.பி. (23), வணிகவரித் துறை உதவி ஆணையர் (14), கூட்டுறவு துறை துணை பதிவாளர் (21), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (14), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (1), மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி (1) பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28-ந்தேதி வெளியிட்டது.
இதற்கான முதல்நிலை கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் எழுதினார்கள். முதல்நிலை தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெளியானது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தக்கட்ட மெயின் தேர்வு டிசம்பர் 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. அதன்படி, குரூப்-1 மெயின் தேர்வு தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 90 பணியிடங்களுக்கான இத்தேர்வை 1,232 ஆண்கள், 655 பெண்கள், ஒரு இதரர் என மொத்தம் 1,888 பேர் எழுத உள்ளனர். 19 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.