உலகக்கோப்பை கால்பந்து: கனடாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ அணி

எப் பிரிவில் மொராக்கோ மற்றும் குரேசியா அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறியது.

Update: 2022-12-01 17:16 GMT

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும். இதில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

அதன்படி குரூப் 'எப்' பிரிவில் இன்று இரவு நடைபெற்ற போட்டியில் கனடா, மொராக்கோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் ஹக்கீம் சீயேஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் யூசுப் என் நெஸ்ரி ஆட்டத்தில் 23-வது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்து அசத்தினார்.

இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கனடா அணி வீரர் நெயீப் அகூர்டு தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்க எடுத்து கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

முடிவில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வீழ்த்தியதுடன், 36 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே இன்று இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெல்ஜியம், குரேஷியா அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் 3 போட்டியில் 1 வெற்றி ,2 டிரா என குரோஷியா அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி 1 வெற்றி , 1 டிரா , 1 தோல்வி என தொடரிலிருந்து வெளியேறியது.

இதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் எப் பிரிவில் மொராக்கோ மற்றும் குரேசியா அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்