பழைய மொபைலையும் மாற்றுவழிகளில் பயன்படுத்தலாம்
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மொபைல் போனை தூக்கி எறியாமல், மறுசுழற்சி செய்யலாம். அதில் இருக்கும் சில உதிரிப்பாகங்கள் மீண்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்தால், அவற்றை மாற்றுவழியில் பொருத்திப் பயன்படுத்தலாம்.
புதிதாக லேட்டஸ்டு மாடல் மொபைல் போன் வாங்கியிருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த பழைய ஆண்ட்ராய்டு மொபைலை கிடப்பில் போடுவதற்கு பதிலாக, ஸ்மார்ட்டான மாற்றுவழிகளில் பயன்படுத்தலாம். அதற்கான சில ஆலோசனைகள்:
சி.சி.டி.வி. கேமரா:
உங்கள் பழைய மொபைலில் இருக்கும் கேமரா நன்றாக செயல்படுகிறதா? 'மொபைல் செக்கியூரிட்டி ஆப்' போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து, அதனை சி.சி.டி.வி. கேமராவாக பயன்படுத்தலாம். அதை வீட்டின் எந்த பகுதியிலும் வைத்து கண்காணிக்கலாம். வீட்டின் நுழைவாயில், விலை உயர்ந்த பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றில் 'ஒயர்லெஸ்' கேமராவாகப் பயன்படுத்தலாம். இந்த மொபைல் போனை எளிதாக சார்ஜ் செய்யும் வகையில் அமைப்பது முக்கியம்.
தகவல் சேகரிப்பு சாதனம்:
தாங்கள் செல்லும் இடங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, மொபைல் போன்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்து வைப்பது பலரின் வழக்கம். இவை அனைத்தையும் ஒரே போனில் சேமித்து வைக்கும்போது, அதன் செயல்பாட்டு வேகம் குறையும். எனவே, இத்தகைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சேமித்து வைப்பதற்கு, பழைய ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்தலாம்.
'மேப்'பாக பயன்படுத்தலாம்:
நம்மில் பலர் அறிமுகம் இல்லாத இடங்களுக்குச் செல்லும்போது, சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு மொபைல்களில் உள்ள 'மேப்' நேவிகேஷனைத்தான் நாடுவோம். இதனால், புதிய மொபைல் போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் விரைவாகவே இறங்கிவிடும். இதைத் தவிர்க்க, கார், டூவீலர் ஆகியவற்றில் பழைய மொபைல் போன்களைப் பொருத்தி நேவிகேஷன் டிவைசாகப் பயன்படுத்தலாம்.
கார் கேமரா:
பழைய மொபைல் போனை, காரின் டேஷ் போர்டில் வைத்து 'டேஷ் கேமராவாக' பயன்படுத்தலாம். தற்போது வரும் புதுரக கார்களில் டேஷ் கேமரா வசதி உள்ளது. பழைய கார்களில் இந்த வசதியைப் பெற விரும்புபவர்கள், பழைய மொபைல் போனைப் பயன்படுத்தலாம். கேமரா செயல்பாடு மற்றும் பேட்டரி திறன் நன்றாக இருக்கும் பழைய போன்களைத் தூக்கி எறியாமல், இதற்காக உள்ள சில செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம். நீண்ட தூர பயணத்தின்போது, இந்த வசதி பலவகையிலும் பயன்படும்.
யுனிவர்சல் ரிமோட்:
டி.வி.யுடன் இணைக்கும் செட்டாப் பாக்ஸ், சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் டிவைஸ்கள் என அனைத்திற்கும் தனித்தனி ரிமோட்கள் இருக்கும். இவற்றை ஒரே ரிமோட்டில் இயக்கும் வகையில், பழைய மொபைல் போனை யூனிவர்சல் ரிமோட்டாக பயன்படுத்தலாம். இதற்காக, 'யுனிவர்சல் ரிமோட் செயல்பாடு' என்ற செயலி உள்ளது. இதை உங்கள் பழைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து மின்சாதனங்களையும் ஒன்றிணைத்து இயக்கலாம்.
மறுசுழற்சி:
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மொபைல் போனை தூக்கி எறியாமல், மறுசுழற்சி செய்யலாம். அதில் இருக்கும் சில உதிரிப்பாகங்கள் மீண்டும் பயன்படுத்தும் நிலையில் இருந்தால், அவற்றை மாற்றுவழியில் பொருத்திப் பயன்படுத்தலாம். மைக், பேட்டரி, மதர்போர்டு உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் பயன்படும். இதனால், சுற்றுச்சூழலும் பாதிக்காது.