மாயமானவர்களின் பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவத்தில் துப்பு துலக்க மாயமானவர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவத்தில் துப்பு துலக்க மாயமானவர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் எலும்புக்கூடு
நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு சொந்தமான பாழடைந்த கிணறு அதே பகுதியில் ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் ஒரு மனித எலும்புக்கூடு கிடப்பதை அந்த பகுதி மக்கள் கண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கி, எலும்புக்கூட்டை சாக்கில் கட்டி கிணற்றின் மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த எலும்புக்கூடை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மாயமானவர்கள் பட்டியல்
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிணற்றில் மர்மநபர் யாரேனும் தவறி விழுந்து இறந்தாரா? இல்லை யாரேனும் அடித்துக் கொன்று விட்டு அந்த நபரை கிணற்றில் வீசினார்களா? என போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் மனித எலும்புக்கூடாக கிடந்த நபர் யாரென்பதை கண்டுபிடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாயமானவர்கள் யார்? அதில் இதுவரை துப்பு துலங்காத வழக்குகள் என்னென்ன? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதே சமயத்தில் எலும்புக்கூடை விரைவில் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.