கிருஷ்ணர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

ஊத்தங்கரை பாம்பாறு அணை அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

ஊத்தங்கரை

கிருஷ்ணர் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு கரையோரத்தில் ஸ்ரீராதா ருக்குமணி வாசுதேவ கிருஷ்ணர் கோவில் உள்ளது. கடந்த 18-ந்தேதி கோவில் பூசாரி வழக்கம்போல பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை பொதுமக்கள் கோவில் வழியாக சென்றனர்.

அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கோவிலின் முன்பக்க கதவு மற்றும் மூலஸ்தானத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன.

வலைவீச்சு

மேலும் மூலஸ்தானத்தில் இருந்த உற்சவ மூர்த்திகளான சக்கரத்தாழ்வார், ராமானுஜர், வாசுதேவ கண்ணன், ராதாருக்குமணி, ராமானுஜர் ஆகிய 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோவிலின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவின். ஹார்ட்டு டிஸ்க்கையும் அந்த நபர்கள் திருடி சென்றுள்ளனர். அத்துடன் கோவில் பூட்டுகள், சாமிக்கு சுற்றி இருந்த காவி துணிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் வீசி சென்றது தெரிந்தது.

மேலும் உண்டியல் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் அதை மர்ம நபர்கள் உடைக்க முடியாததால் அதல் இருந்த பணம் தப்பியது. திருட்டு போன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மாரியம்மன் கோவில்

இதேபோன்று சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் மாரியம்மன், முனியப்பன் கோவில்கள் அருகருகே உள்ளன. மர்ம நபர்கள் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். முனியப்பன் கோவிலில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டுள்ளது. பணம் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்