அழகுக்கான அறுவை சிகிச்சைகள் ஆரோக்கியமானதா?

அழகான முகத் தோற்றத்திற்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வது அவசியமான உயிர் காக்கும் விஷயம் இல்லை என்றாலும், அது தனிநபரின் விருப்பம் சார்ந்தது. ஆனால், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

Update: 2022-07-24 01:30 GMT

முகம் மற்றும் உடல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் வழக்கம் சினிமா மற்றும் மாடலிங் துறை சார்ந்த பிரபலங்களிடையே இருக்கிறது. தற்போது இந்த செயல்பாடு சாதாரண மக்களிடமும் மெதுவாகப் பரவி வருகிறது. குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக பலர் இத்தகைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி ஆரோக்கியமானது தானா? அதனால் பின் விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை (பிளாஸ்டிக் சர்ஜரி) தலைமை பேராசிரியர் மருத்துவர் ரமாதேவியிடம் கேட்டோம்.

"பிளாஸ்டிக் சர்ஜரியை மறுசீரமைப்பு சிகிச்சை, ஒப்பனை அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை' என்பது பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகளான உதடு பிளவுகளை சீரமைத்தல், காது மடல்களை சீரமைத்தல் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படுவது. 'கை அறுவை சிகிச்சை' என்பது வெட்டுக்காயம், கை விரல்கள் துண்டாகிவிடுதல் போன்ற சூழலில், வெட்டப்பட்ட இடத்தைச் சேர்த்துத் தைத்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவும்.

மூன்றாவதாக 'ஒப்பனை அறுவை சிகிச்சை'. ஒருவர் தன் உடல் அமைப்பை தனக்கு பிடித்தாற்போல் மாற்றிக்கொள்ள செய்துகொள்வது. இதில் மார்பக சீரமைப்பு, உடல் எடைக் குறைப்பு, உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் சதைகளை நீக்குதல் என அழகு சார்ந்த பல வகைகள் இருக்கின்றன.

அழகான முகத் தோற்றத்திற்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வது அவசியமான உயிர் காக்கும் விஷயம் இல்லை என்றாலும், அது தனிநபரின் விருப்பம் சார்ந்தது. ஆனால், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு முன்பு சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் ஏதாவது உடல் உபாதைகள், இதயம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சை செய்து முடிக்க குறிப்பிட்ட கால அவகாசம் ஆகும். அதற்காக 'அனஸ்தீசியா' எனப்படும் மயக்க மருந்து கொடுப்பதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்குமா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். பிறகு அறுவை சிகிச்சை செய்வது அவசியமானது தானா? என முடிவு எடுக்க வேண்டும்.

மற்ற சிகிச்சை முறையில் இருப்பது போலவே இதிலும், சில ஆபத்துகள் நிகழலாம். எனவே மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனைகள் பெற்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதே நல்லது" என்றார் மருத்துவர் ரமாதேவி. 

Tags:    

மேலும் செய்திகள்