இப்படிக்கு தேவதை
நீங்கள் நிலைமையை நடைமுறைக்கு ஏற்றவாறு அணுகுங்கள். இப்போது உங்கள் கணவருக்கு சரியான வேலை இல்லை. எனவே இருவரின் பொருளாதார ரீதியான தேவைகளை கவனிக்கும் பொறுப்பு உங்களுடையது.
1. நான் கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்தப் பிறகு, கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அதிகமாக சுத்தம் பார்க்க ஆரம்பித்தேன். இப்போது, அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது. உறவினர் வீடுகளுக்கு சென்றால் கூட, அங்கு சுத்தமாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் எதுவும் சாப்பிடுவது இல்லை. எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக என்னை நானே தனிமைப்படுத்தி வருகிறேன். இதை மாற்றிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.
நீங்கள் சுகாதாரத்தின் மீது பிடிவாதமாக இருப்பது போல் தெரிகிறது. நீங்கள் கூறி இருப்பதை ஆராய்ந்து பார்த்தால், தற்போது உங்களுக்கு மருத்துவரின் உதவி நிச்சயமாக தேவைப்படும் என்று தோன்றுகிறது. விரைவாக ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் சுத்தத்தின் மீதான உங்கள் தீவிரத்தைக் குறைக்கவும், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து மீளவும் உதவும் மருந்துகளை உங்களுக்கு பரிந்துரைப்பார். நீங்கள் உடனடியாக செயலில் இறங்குவது நல்லது. இல்லையெனில், உங்கள் பிரச்சினை மனஅழுத்தக் கோளாறாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
2. எனக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கணவருக்கு இதுவரை சரியான வேலை கிடைக்கவில்லை. அவரது பெற்றோர்தான் குடும்பத் தேவைகளை கவனித்து வருகிறார்கள். கணவர் என்னிடம் அதிகமாக கோபப்படுகிறார். அனைவருடனும் சண்டை போடுகிறார். என்னை வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. நான் பட்டப்படிப்பு முடித்தும், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன். வீட்டில் என்ன நடந்தாலும், நான் எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் தாய் வீட்டுக்கே சென்று விடலாம் என நினைக்கிறேன். எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.
உங்கள் கணவர் வீட்டினரின் சிந்தனைகள் உங்களிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கிறது. பெண்ணைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் இன்னும் பழமைவாதத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் நிலைமையை நடைமுறைக்கு ஏற்றவாறு அணுகுங்கள். இப்போது உங்கள் கணவருக்கு சரியான வேலை இல்லை. எனவே இருவரின் பொருளாதார ரீதியான தேவைகளை கவனிக்கும் பொறுப்பு உங்களுடையது.
அதற்கு உங்களுக்கு ஒரு வேலை தேவை. எனவே விரைவாக உங்களுக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். கணவர் வீட்டினர் இதை எதிர்த்தால், நீங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கென்று ஒரு வேலை கிடைக்கும் என்றும் உறுதியாக அவர்களிடம் கூறுங்கள்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக உங்கள் பிறந்த வீட்டுக்கு செல்வதைப் பற்றி நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால் நீங்கள் எங்கு இருந்தாலும், நிதி ரீதியாக யாரையும் சாராமல் சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியமானது.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.