இப்படிக்கு தேவதை

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

Update: 2022-09-04 01:30 GMT

ன் வயது 21. நான் காதலிக்கும் நபர் என் வீட்டின் அருகில் வசிக்கிறார். அவர் வயது 33. வேற்று மதத்தைச் சேர்ந்தவர். நல்ல பழக்கவழக்கம் கொண்டவர்தான் என்றாலும், வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றுபவர். சிறு வயதில் இருந்தே அவரிடம் ஒருதலை காதலாக இருந்து வருகிறேன். அவர் என் வீட்டை கடந்து செல்லும்போது, என் மனமும் அவருடனே செல்கிறது. அவர் என்னை பற்றி என்ன நினைக்கிறார் என்று கூட தெரியாது. ஆனால் அவர் மீது எனக்கு கடந்த 10 ஆண்டுகளாக, அபரிமிதமான காதல் கூடுகிறதே தவிர குறையவில்லை. வெளியில் யாரிடமும் சொல்ல முடியவில்லை. எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

21 வயது கொண்ட நீங்கள், கடந்த 10 வருடங்களாக காதலிக்கிறீர்கள் என்றால், உங்களுடைய 11 வயதில் இருந்து அந்த நபரின் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த வயதில், உங்கள் மனம் ஒரு தந்தை அல்லது சகோதர பாசத்தை தேடியிருக்கக்கூடும். அந்த நபர் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவராக தோன்றியிருக்கலாம். 11 வயதில் நீங்கள் காதல் ரீதியாக ஈர்க்கப்பட்டிருக்க முடியாது.

இருப்பினும், நீங்கள் இளமைப் பருவத்தை அடைந்தபோது காதல் ஹார்மோன்களின் காரணமாக, அந்த நபரைப் பற்றி காதல் கண்ணோட்டத்தில் சிந்திக்க ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால், ஒரு உறவு செயல்பட ஆர்வம் மட்டும் போதாது. நெருக்கமும், அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். அதற்கு உறுதித்தன்மை அவசியம்.

ஆனால், இந்த நபரைப் பொறுத்தவரை நிலையான வேலையின்மை, வயது வித்தியாசம் மற்றும் மத வேறுபாடு ஆகியவை வெளிப்படையான தடைகளாக இருக்கின்றன. இதை உங்கள் குடும்பத்தினர் ஏற்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.

நடைமுறையில் பார்த்தீர்களென்றால் உங்கள் பகுத்தறிவு மூளையை விட, உணர்ச்சி ரீதியான மூளைதான் அந்த நபரை நோக்கி உங்களை நகர்த்துகிறது. இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை அனுபவம் விரிவடையும்போது, யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். அப்போது உங்கள் பகுத்தறிவு மூளை, அந்த நபரை விட்டு விலகிச் செல்ல உங்களுக்கு அறிவுறுத்தும். அதற்கு முன்பு எந்த ஒரு அவசர முடிவும் எடுக்க வேண்டாம்.

33 வயதாகியும் நல்ல வேலை மற்றும் வாழ்க்கை துணையுடன் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்புத்தன்மை இல்லாமல் இருப்பதே, அந்த நபர் பற்றிய எதிர்மறை புள்ளியாகும். எனவே இதையெல்லாம் சிந்தித்து கவனமாக முடிவெடுங்கள். உலகைப் பற்றிய உங்கள் பார்வையை விரிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். உணர்ச்சிப்பூர்வமாக சிந்திக்காமல், நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு அறிவுப்பூர்வமாக யோசியுங்கள்.

உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். பிறகு சிந்தியுங்கள். நல்ல முடிவு கிடைக்கும்.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர். 

Tags:    

மேலும் செய்திகள்