இப்படிக்கு தேவதை

Update: 2022-06-06 05:30 GMT

1. எனது கணவர் தனியார் வங்கியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள். இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். வசதி வாய்ப்புக்கு குறைவில்லாமல் வாழ்கிறோம். ஆனால், என் கணவர் என்னிடமோ, எனது மகள்களிடமோ, பிரியமாக பேசுவதோ, நேரம் செலவிடுவதோ, வெளியில் அழைத்துச் செல்வதோ கிடையாது. விடுமுறை நாட்களில் கூட, மிச்சமிருக்கும் வேலைகளை முடிப்பதற்காக அலுவலகம் சென்று விடுவார். மாலையில் வீட்டுக்கு வந்ததும், அவரது அறையில் தனியாகத் தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

மகள்கள் இதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது இல்லை. ஆனால், என்னால் கணவரின் செயல்களை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. தனிமை உணர்வு அதிகமாக இருக்கிறது. எனக்கு வழிகாட்டுங்கள்.

உங்கள் கணவர் இயல்பிலேயே தனிமையை அதிகம் விரும்புபவராக இருக்கலாம். நீங்கள் கூறி இருப்பதை பார்க்கும் போது, அவர் குடும்பத்துக்காகவும், வேலைக்காகவும் சமமாக நேரம் ஒதுக்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது புரிகிறது. இந்த மாற்றங்கள் அவர் வங்கியில் உயர் பதவிக்கு வந்த பிறகு ஏற்பட்டதா? என்று கவனிக்கவும்.

வேலையின் அழுத்தம் காரணமாகவும் அவர் இவ்வாறு நடந்து கொள்ளலாம். வீட்டில் அவரது அறையில் தனிமையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, நீங்களும் அவருடன் அமர்ந்து அவருக்கு பிடிக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

இதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை உண்டாகலாம். இரவு உணவுக்கு பின்பு, அவருடன் சிறிய நடைப்பயிற்சி செல்லுங்கள். அப்போது இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதிகமாக பேசாதது அவரது இயற்கை சுபாவம் எனில், அதை மாற்றுவது கடினம். உங்கள் மகள்கள் மேற்படிப்புக்காகவோ, வேலைக்காகவோ, திருமணம் முடித்தோ உங்களைப் பிரிந்து செல்லும் போது, நீங்கள் அதிக தனிமையை உணர நேரிடும். எனவே உங்கள் கணவரின் இயல்பு மாறாதபோது, அதை நினைத்து கொள்ளாமல், உங்களுக்கான நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள்.

2. நான், எனது நண்பரை ஒருதலையாக காதலித்து வருகிறேன். ஊரடங்கு காரணமாக நான் இருந்த ஊரில் இருந்து, எனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதாயிற்று. அன்றில் இருந்து என்னிடம் அவர் சரியாக பேசுவது இல்லை. தொலைபேசியிலும் ஒரு சில நிமிடங்களுக்குள் பேசிவிட்டு துண்டித்து விடுகிறார். மற்ற நண்பர்களிடம் எப்போதும் போல் பழகும் அவர், என்னிடம் இவ்வாறு நடந்துகொள்ள என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கிறேன். அவருடன் பழகுவதைத் தவிர்த்து விடலாமா? என்று எண்ணுகிறேன். இந்த நிலையில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.

கெஞ்சுவதாலோ, நிர்பந்திப்பதாலோ பெறக்கூடியது அல்ல காதல். உங்கள் நண்பர் உங்களை நல்ல தோழியாக மட்டுமே பார்க்கிறார் என்றால், அவரது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். உங்கள் தொலைபேசி அழைப்புகளை தவிர்ப்பது ஏன்? என்று அவரிடம் வெளிப்படையாகக் கேட்டு விடுவதே சிறந்தது. எதையும் கேட்காமல் மனதிற்குள் வைத்து சிந்தித்துக் கொண்டே இருப்பது, நாளடைவில் உறவில் நஞ்சை விதைக்கும். எனவே வெளிப்படையாக செயல்படுவதே இருவருக்கும் நல்லது.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

Tags:    

மேலும் செய்திகள்