நினைவுகளை சிலையாக வடிக்கும் தரணிபிரியா

சிறு குழந்தைகளின் கை, கால்கள் மட்டும் இல்லாமல், சகோதர-சகோதரிகள், பெற்றோர்-குழந்தைகள், காதலர்கள், மணமகன்-மணமகளின் இணைந்த கை கள், திருமண நாளன்று தம்பதிகளின் கோர்த்த கரங்கள், நிறைமாத கர்ப்பிணியின் வயிறு, செல்லப் பிராணிகளின் பாதங்கள் என பல அம்சங்களையும் அச்சு எடுத்து, சிலை செய்து தருகிறேன்.

Update: 2022-10-16 01:30 GMT

''தங்களது குழந்தை பிஞ்சுக் கைகளையும், கால்களையும் அசைத்து விளையாடுவதைப் பார்த்து பெற்றோர் உள்ளம் பூரிப்படைவார்கள். என்றென்றும் அந்த நினைவு அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில், குழந்தைகளின் கை, கால்களை அச்செடுத்து சிலைகளாக வடித்து தருகிறேன். இதை எப்போதும் அவர்கள் பார்த்து மகிழ முடியும். குழந்தை வளர்ந்ததும் அவர்களுக்கு தங்களின் அன்பு பரிசாகக் கொடுக்க முடியும்" என்கிறார் தரணிப்ரியா.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்த தரணி ப்ரியா, குழந்தைகளின் குட்டி கை, கால்களை அச்சு எடுத்து, முப்பரிமாண முறையில் சிலையாக செய்து நினைவுச் சின்னமாக சட்டமிட்டுத் தருகிறார். புதுமணத் தம்பதிகள் கைகளைக் கோர்த்த நிலையில் இருக்கும் நிகழ்வை அச்சு எடுத்து சிலையாக செய்து கொடுக்கிறார்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்கும், இதுபோல சிலைகளால் ஆன நினைவுச் சின்னங்களைச் செய்து கொடுத்திருக்கிறார். அவரது பேட்டி…

"நான் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கோவையில் வசிக்கிறேன். தகவல் தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பை முடித்து பணியாற்றிய படியே கம்ப்யூட்டர் பயன்பாடுகள் துறையில் பட்டம் பெற்றேன். அதன் பிறகு, குழந்தைகளின் கை, கால்களை அச்சு எடுத்து சிலை செய்யும் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். எனது கணவர் ஹரிகிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். மகள் விஸ்ருதா ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்."

குழந்தைகளின் கை, கால்களைச் சிலையாக செய்வதில் ஆர்வம் வந்தது எப்படி?

என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, குழந்தைகளின் கை, கால்களை அச்சு எடுத்து சிலையாக செய்து வைத்துக் கொண்டால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் அது ஞாபகார்த்தமாக இருக்கும் என்று கருதினோம். வட இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் இதையே தொழிலாக செய்து வருகிறார்கள் என்பதை அறிந்தேன்.

அதன் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டு, எனது மகளின் கைகளை அச்செடுத்து சிலையாக செய்து பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களும், நண்பர்களும் தங்கள் குழந்தைக்கும் செய்து தரும்படி கேட்டதால் அவர்களுக்கு மட்டும் முதலில் செய்து கொடுத்தேன். பிறகு அதுவே எனது முழுநேரத் தொழிலாகிவிட்டது.

குழந்தை சிலைகள் தவிர வேறு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

சிறு குழந்தைகளின் கை, கால்கள் மட்டும் இல்லாமல், சகோதர-சகோதரிகள், பெற்றோர்-குழந்தைகள், காதலர்கள், மணமகன்-மணமகளின் இணைந்த கை கள், திருமண நாளன்று தம்பதிகளின் கோர்த்த கரங்கள், நிறைமாத கர்ப்பிணியின் வயிறு, செல்லப் பிராணிகளின் பாதங்கள் என பல அம்சங்களையும் அச்சு எடுத்து, சிலை செய்து தருகிறேன். குழந்தைகளின் கை, கால் சிலைகளை தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய அளவில் உருவாக்கி, வெள்ளி மற்றும் தங்கத்தில் டாலர், மோதிரம் போன்ற ஆபரணங்களாகவும் செய்கிறேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் பயணித்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளை செய்து தந்திருக்கிறேன். இதற்காக இரு சக்கர வாகனத்தில் மட்டுமே 30 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குத் தனியாக பயணித்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக ஒரு லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் தமிழ்நாடு முழுவதும் பயணித்திருக்கிறேன்.


உங்கள் தொழிலுக்கு வரவேற்பு எவ்வாறு இருக்கிறது?

வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்குச் சென்று குழந்தைகளின் கை, கால்களை அச்சு எடுத்ததும், அதைத் திறந்து காண்பித்து உங்கள் குழந்தையின் கை, கால்கள் சிலை எவ்வாறு இருக்கும் என்று புரிய வைப்போம். இந்த வெளிப்படைத் தன்மை வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற்றது. அதன் பிறகு சிலைகளை சட்டமிடுவதற்கான மாடல்களையும், வண்ணங்களையும் வாடிக்கையாளரிடம் வரைந்துக் காட்டி அவர்களுக்கு திருப்தியான அளவிலும், வடிவத்திலும் செய்து கொடுக்கிறேன்.

எனக்குக் கிடைத்த தொழில் வாய்ப்புகள் அனைத்தும் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவே வந்தன. இன்று இந்தத் தொழிலை நிறைய பேர் செய்கிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே நான் உந்து சக்தியாக இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு தெரிந்த இந்த கலையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கப் போகிறேன்.

உங்களது தொழில் சார்ந்து ஏதேனும் விருதுகள் பெற்றிருக்கிறீர்களா?

ஆரம்பத்தில் உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மட்டும் அவ்வப்போது சிலைகளை செய்து கொடுத்த நான், 2018-ம் ஆண்டு முதல் இந்தத் தொழிலை முழுவீச்சில் தொடங்கினேன். 2019-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஹோம்பிரனர் சுயசக்தி விருதுகளில், கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவில் சிறப்பு விருது கிடைத்தது. பிறகு 'கோவை வொண்டர் உமன்' விருது கிடைத்தது. தொடங்கிய இரண்டே ஆண்டில் 1692 குழந்தைகளின் கை, கால் சிலைகளைச் செய்ததற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏஷியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பிடித்தேன்.

உங்களைப் போல தொழில் செய்ய முயற்சிக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்கள் தைரியமாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் எந்தவொரு தொழிலைச் செய்தாலும் அதில் நிச்சயமாக வெற்றி பெறலாம். 

Tags:    

மேலும் செய்திகள்