இசை நிகழ்ச்சியில் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி
மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.
மலேசியா,
ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.
தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவை. சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. விவாகரத்துக்குப் பின்பும் இருவரும் இணைந்து சார் படத்தில் 'பனங்கருக்கா' பாடலைப் பாடியிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மலேசியாவில் நடைபெற்ற ஜி.வி பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் சைந்தவி கலந்துகொண்டு பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சியில் மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற, 'பிறை தேடும் இரவிலே' பாடலை இருவரும் இணைந்து பாடியது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை அளித்தது. . விவாகரத்துக்குப் பின் இவர்கள் இணைந்து பாடியதைக் கேட்ட ரசிகர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.