அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (புதன்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளில், “அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராக உள்ளோம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

தடை வேண்டும்

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் புதிதாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், “பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே இந்த கூட்டங்களை கூட்ட அதிகாரம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல், உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்” என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர்.

இன்று விசாரணை

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, இந்த வழக்கில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதால், வழக்கை 22-ந் தேதி (இன்று) விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பொதுக்குழுவுக்கு தடை கோரி ஏற்கனவே 2 வழக்குகள் தொடரப்பட்டு அது மீதான விசாரணை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருவது நினைவுகூரத்தக்கது.

Update: 2022-06-22 03:47 GMT

Linked news