செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆக.28ம் தேதி விசாரணைக்கு வரும் எனவும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை எம்.பி. எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சென்னை எம்பி, எம்பிக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. விசாரணையின்போது செந்தில் பாலாஜி எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கவில்லை. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து கிரிமினல் சதியில் ஈடுபட்டார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கூட்டுச்சதி நடைபெற்று உள்ளதாகவும் கூறியுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கணக்கில் பெரும் தொகை டெபாசிட் ஆகியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த 3 வழக்குகள் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.