ஏழாமிடத்தில் குருபகவான்; இல்லற வாழ்க்கை இனிப்பாகும்
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்திக்கும் கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், 13.4.2022 முதல் 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கிறார். அங்கிருந்து கொண்டு ஓராண்டு காலம் தனது பார்வை பலனால் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றப் போகிறார். சப்தம பார்வையாக குரு பார்ப்பதால் சந்தோஷம் கூடும். சங்கடங்கள் அகலும்.
குரு இருக்கும் இடத்தின் பலன்
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு, உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவின் நேர் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் அகலும். பற்றாக்குறை மாறி பணத்தேவை பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். திருமணப் பேச்சுக்கள் முடிவாகும். செல்வாக்கு மிக்கவர்களின் பழக்கத்தால் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் வாயிலாக வந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். கண்ணேறுபடும் விதத்தில் வாழ்க்கைத் தரம் உயரும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான், உங்கள் ராசிக்கு 1, 3, 11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். அதன் பார்வை பலனால் எண்ணற்ற நற்பலன்கள் வரப்போகிறது. ஜென்ம ராசியில் குருவின் பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரினை சுமுகமாக முடியும். பக்கபலமாக அதிகாரப் பதவியில் இருப்பவர் வந்திணைந்து உங்கள் சிக்கல்கள் தீர வழிகாட்டுவர். சிரமங்கள் குறையும். இப்பொழுது பணிபுரியும் நிறுவனத்தைக் காட்டிலும், வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம்.
11-ம் இடத்தை குரு பார்ப்பதால் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து இயங்கும் வாய்ப்பு கைகூடிவரும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள் சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில் தன்னுடைய சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் மனதைப் புரிந்துகொண்டு செயல்படுவர். புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும். உங்கள் விருப்பப்படி வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து விற்பனையால் ஆதாயம் உண்டு. சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், சனியின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாக அகலும். நல்லவர்களின் தொடர்பால் நலன் காண்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். ரேவதி நட்சத்திரக் காலில், புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது, பணிபுரியும் இடத்தில் உற்சாகம் பொங்கும். உடன் இருப்பவர் களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தொய்வு இல்லாத முயற்சியும், துவண்டு போகாத மனமும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும்.
குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு பகவான், வக்ரம் பெறுவது நன்மைதான். 'நிலம் வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே, பிரச்சினை மேல் பிரச்சினை வந்து கொண்டிருக்கின்றதே, எப்பொழுதுதான் அதற்கு விடிவுகாலம் பிறக்கும்' என்று நினைத்தவர்களுக்கு, அதற்கான தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தக் குருப்பெயர்ச்சி மகிழ்ச்சியையும், பொருளாதார விருத்தியையும் வழங்கப்போகிறது. எடுத்த காரியங்கள் எளிதில் முடியும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள்.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமைய, இல்லத்து பூஜையறையில் குருகவசம் பாடி குருவை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் வைரவன்பட்டி சென்று அங்குள்ள தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்.