(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
இடமாற்றங்கள் இனிமை தரும்
ரிஷப ராசி நேயர்களே!
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு வந்து விட்டது. வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து, சர்ப்பக்கிரக ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏற்ற இறக்கம் கலந்த நிலையே இருக்கும். மார்ச் மாதம் ஏற்படும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு, எதிர்பார்ப்புகள் நிறைவேறி, படிப்படியான முன்னேற்றம் அடைவீர்கள். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை உறுதியாகலாம்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்ரன், தன- பஞ்சமாதிபதி புதனுடன் இணைந்து 9-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சி வெற்றியாகும். யோகம் தரும் சனி, சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தந்தை வழி உறவு அனுகூலமாகும். பூர்வீக சொத்தில் முறையான பங்கீடு கிடைக்கும். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால், வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். ஜென்ம ராகு மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதே நேரம் 'சந்திர மங்கள யோகம்', 'புத சுக்ர யோகம்' இருப்பதால், இந்த ஆண்டு சுபகாரியங்கள் முடிவாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொல்லை அகலும். பணியில் உயர் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பர். 8-ல் சூரியனும், 10-ல் குருவும் இருப்பதால், பெற்றோர் உடல்நலனில் அக்கறை தேவை.
கும்ப குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். '10-ல் குரு வந்தால் பதவி மாற்றம்' என்பது பழமொழி. குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் இப்பொழுது பதிகிறது. எனவே குடும்பத்தில் உள்ளவர் களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். கொடுக்கல் -வாங்கல் ஒழுங்காகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலனை சீராக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாளாக வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.
ராகு-கேது பெயர்ச்சி
21.3.2022ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராகு 12-ம் இடத்திலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவால், விரயங்கள் அதிகரிக்கலாம். அவற்றை சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த முன்வருவீர்கள்.
ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். சுய நலத்தைக் காட்டிலும் பிறர் நலம் கருதி முயற்சி எடுப்பீர்கள். சொந்தங்களிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி
13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். அவர் மீனத்தில் இருந்தபடியே, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றன. இந்த காலகட்டத்தில் சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பர்.
சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்
சனியின் வக்ர காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்படுவது நல்லது. 25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுவதால் தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். உறவினர்களின் பகையால் உள்ளம் வாட நேரிடும். உயரதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும்.
8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமான குரு, வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது எல்லா வழிகளிலும் நன்மைகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத முன்னேற்றங்களால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற பிரதோஷ விரதமிருந்து நந்தியை வழிபடுவது நல்லது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு புதிய திருப்பங்களை உண்டாக்கும். பொருளாதாரத்தில் நிறைவை ஏற்படுத்தும். இடமாற்றம் இனிமை தரும். கணவன் - மனைவி உறவு பலப்படும். குரு பார்வையால் சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். ராகு-கேது பெயா்ச்சிக்குப் பிறகு மிகுந்த நற்பலன்கள் வந்து சேரும். பணிபுரியும் பெண்களுக்கு இடர்பாடுகள் இருந்தாலும், முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. இதுபோன்ற காலங்களில் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சொத்துக்களால் சில பிரச்சினைகள் வரலாம். சொந்த பந்தங்களால் விரயங்கள் உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்வதாலும் பிரச்சினை உருவாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. அருளாளர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் பலன் தரும்.