01.01.2023 முதல் 31.12.2023 வரை
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
சனிப் பெயர்ச்சிக்கு பிறகு சந்தோஷங்கள் அதிகரிக்கும்
ரிஷப ராசி நேயர்களே!
நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த புத்தாண்டு வந்துவிட்டது. உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்திலேயே கிரகங்கள் சஞ்சரிக்கப்போகின்றன. சனி, குரு, ராகு-கேது ஆகியவை பெயர்ச்சியாவதன் மூலம், முதல் தரமான வாழ்க்கை அமையப்போகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரன், தர்ம - கர்மாதிபதியாக விளங்கும் சனியோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெற்று சஞ்சரித்தபடி ஆண்டு தொடங்குகிறது. எனவே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பொன்னான வாழ்க்கை மலர, புத்தாண்டின் கிரக நிலைகளில் மாற்றம் வரும் போதெல்லாம் ஏற்றம் தரும் தெய்வத்தை வழிபட்டு வாருங்கள்.
புத்தாண்டு கிரக நிலை
புத்தாண்டு தொடக்கத்தில் ஜென்ம ராசியில் விரயாதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன், பாக்கிய ஸ்தானத்தில் சனியோடு இணைந்திருக்கிறார். அஷ்டமத்தில் சூரியனும், புதனும் சேர்ந்திருக்கின்றனர். லாப ஸ்தானத்தில், லாபாதிபதி குரு பலம்பெற்று சொந்த வீட்டில் இருக்கிறார். 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.
ஆண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடங்கள் புனிதமடைகின்றன. உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சுக்ரனுக்கு, குரு பகவான் பகைக் கிரகமாக விளங்கினாலும், 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால் அது பார்க்கும் இடங்கள் எல்லாம் நன்மையாகவே நடைபெறும். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். நிரந்தர வருமானத்திற்கு வழிபிறக்கும். இல்வாழ்க்கை இனியதாக அமையும். தம்பதியர்களுக்குள் இணக்கம் ஏற்படும். தனித்தனி ஊர்களில் பணிபுரிந்த தம்பதியர் இனி ஒரே ஊரில் பணிபுரிய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
கும்ப - சனி சஞ்சாரம்
29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் வக்ர இயக்கத்தில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் சனி சஞ்சரிக்கும் பொழுது மாற்றங்களும், ஏற்றங்களும் உருவாகும். தொழில் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, வக்ர காலத்தில் தொழில் மாற்றங்களை உருவாக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றமும், இடமாற்றமும் எதிர்பாராத விதத்தில் வரலாம். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக சனி விளங்குவதால், எதற்கும் பயப்படத் தேவையில்லை. மாறுதல்கள் வந்தாலும் அது மனதிற்கினிய விதத்திலேயே அமையும்.
மேஷ - குரு சஞ்சாரம்
22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில், மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அவரது பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது. குருவின் பார்வை பலத்தால் அந்த இடங்கள் புனிதமடைகின்றது. 4-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவதில் இருந்த தடை அகலும்.
6-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால் நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து அலைமோதும். தற்காலிகப் பணியில் உள்ள உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்லநேரம் தொடங்கப்போகிறது. கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலமும் வருமானம் வரலாம். லாபம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் ஆயுள் ஸ்தானம் பலப்படுகிறது. ஆரோக்கியத் தொல்லை அகன்று மருத்துவச் செலவு குறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு.
ராகு-கேது பெயர்ச்சி
8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகுவும், 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போவதால் சுமார் 1½ ஆண்டு காலம் அவர்களுக்குரிய ஆதிபத்ய பலன்களை வழங்குவர். லாப ஸ்தானத்திற்கு வரும் ராகு, பணத்தேவையைப் பூர்த்தி செய்வார். சரிந்த பொருளாதாரம் உயரும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடன் உதவி கிடைக்கும். 'படித்து முடித்தும் வேலையில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலைவாய்ப்பு அமையும்.
5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், இல்லத்தில் பிள்ளைகள் வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த மனச் சங்கடங்கள் மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். 'பூர்வீகச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கலாமா?' என்று யோசிப்பீர்கள். ஆலயத் திருப்பணிகளுக்கு கொடுத்து உதவுவீர்கள்.
செவ்வாய் - சனி பார்வை
இந்தப் புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனி பார்வை ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தொழில் குறுக்கீடுகள் ஏற்படும். அனைத்து காரியங்களிலும் அதிக கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளால் தொல்லைகள் வந்துசேரும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. சொந்தங்களாலும், சொத்துக்களாலும் மனக்குழப்பம் ஏற்படும். இக்காலத்தில் வழிபாடுகளும், ஆன்மிகப் பெரியவர்களின் வழிகாட்டுதலுமே கைகொடுக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
பிரதோஷ காலத்தில் சிவாலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். யோகபலம் பெற்ற நாளில் வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
சனி மற்றும் குரு வக்ர காலம்
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்தில் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். உறவினர்களின் பகையால் உள்ளம் வாட நேரிடும். உயரதிகாரிகளிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுயதொழில் செய்யும் சிந்தனை அதிகரிக்கும்.
12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக உள்ளதால், அவரது வக்ர காலம் உங்களுக்கு வளர்ச்சியான காலமாகவே இருக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. இழப்புகளை ஈடுகட்ட எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வெளிநாட்டு முயற்சியும் அனுகூலமாகும். இதுபோன்ற வக்ர காலங்களில், சுய ஜாதக அடிப்படையில் பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இப்புத்தாண்டு பொருளாதாரத்தில் நிறைவை ஏற்படுத்தும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உடனிருப்பவர், உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். புகுந்த வீட்டில் மதிப்பும், மரியாதையும் உயரும். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு, உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். குருப்பெயர்ச்சியின் விளைவாக சுபவிரயங்கள் ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்து ஆதரவோடு, நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.