01.01.2023 முதல் 31.12.2023 வரை
விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவா்களுக்கும்)
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாகும்
விருச்சிக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை தரும், ஆண்டாக அமையப் போகிறது. தன ஸ்தானத்தில், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும் இணைந்து சஞ்சரித்தபடி ஆண்டு தொடங்குவதால் தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சனி, குரு மற்றும் ராகு, கேது பெயர்ச்சிகளின் விளைவாக வசந்த காலம் உருவாகப் போகிறது.
புத்தாண்டு கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், வக்ரம் பெற்று ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தனவரவு தாராளமாக வந்துசேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். தன ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானத்தில் சனியோடு சுக்ரன் வீற்றிருக்கிறார். 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஜீவன ஸ்தானத்தில் ராகு, சந்திரனோடு கூடியிருக்க, 12-ல் கேது இருந்தபடி புத்தாண்டு தொடங்குகிறது.
ஆண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால், மிஞ்சும் பலன் தரும் விதம் தொழிலில் லாபம் கிடைக்கும். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வருங்காலத்தை வளமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஒளிமயமான எதிர்காலம் உருவாக நண்பர்கள் வழிகாட்டுவர். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகளால் பலன் உண்டு. வெளிநாட்டில் இருந்தும் அனுகூலத் தகவல் கிடைக்கும்.
கும்ப - சனி சஞ்சாரம்
29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து, நல்ல மாற்றங்களை உருவாக்குவார். கும்பச் சனி உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியாக அமைகிறது. அதனால் கவலைப்பட தேவையில்லை. சனி பகவான் உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானத்திற்கும் அதிபதி என்பதால், தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிவகுப்பார். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய இடம் வாங்கும் யோகம் உண்டு. கட்டிய வீட்டை பழுது பார்க்கும் முயற்சி, கார், வண்டி, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல்நலத்தை சீராக்கிக் கொள்ளலாம்.
மேஷ - குரு சஞ்சாரம்
22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிப் போகிறார். அவரது பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு பார்க்கக் கோடி நன்மை என்பதற்கேற்ப, இந்த மூன்று இடங்களின் ஆதிபத்தியம் வாயிலாக உங்களுக்கு முத்தான பலன்கள் வந்து சேரப்போகிறது. பொதுவாகக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். இதயம் மகிழும் விதத்தில் வரன்கள் வந்து, இல்லத்தில் சுபகாரியம் நடந்தேறும். தொழில் வெற்றி நடை போடும். வருமானம் பலவழிகளிலும் வந்து வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் பலமடைகிறது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி என்ற நிலை உருவாகும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமின்றி, உடன் இருப்பவர் களுக்கும் வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் பெருகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் பதவிகள் தானாக வரலாம். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும்.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் மற்றும் நவீன பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணம், பெற்றோரின் மணிவிழா, புதுமனை புகுவிழா, பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் போன்றவற்றை நடத்தி மகிழும் வாய்ப்பு உண்டு.
ராகு- கேது பெயர்ச்சி
8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகு பகவான் 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் முன்னேற்றம் உண்டு. பழுதடைந்த வீட்டைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங் களில் இருந்து அழைப்புகள் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
இப்புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனி பார்வை ஏற்படுகிறது. எனவே அவரது பார்வைக் காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருப்பது அவசியம். எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை களைக் கேட்டும், ஆன்மிகப் பெரியவர்களின் ஆசிகளைப் பெற்றும் செய்வது நல்லது. புதியவர்களை நம்பி தொழிலில் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல. உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமே நன்மைகளை அடையலாம். குடும்பச்சுமை கூடும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஆண்டு முழுவதும் சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள்வழங்கும் கற்பக விநாயகரை வழிபட்டு வந்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சனி மற்றும் குருவின் வக்ர காலம்
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4-க்கு அதிபதியானவர் சனி. இக்காலத்தில் உடன்பிறப்புகளின் அனுசரிப்புகள் கொஞ்சம் குறையலாம். கட்டிடப் பணியில் தாமதம் ஏற்படும். உத்தியோகம், தொழிலில் இடமாற்றங்களும், இலாகா மாற்றங்களும் வரலாம்.
12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே இக்காலத்தில் வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது. குடும்ப முன்னேற்றத்தைக் கருதி நீங்கள் நல்லது செய்தாலும் இல்லத்தில் உள்ளவர்கள் நன்றிகாட்ட மாட்டார்கள். இக்காலத்தில் குருவிற்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. குறிப்பாக அவர்களின் திருமண காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் அளவு உங்கள் முன்னேற்றம் இருக்கும்.