8.10.2023 முதல் 25.4.2025 வரை
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகுவால், புதிய பாதை புலப்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வேலைவாய்ப்பின்றி இருந்தவர்களுக்கு வேலையும், மண மாலை அமையாதவர்களுக்கு திருமணமும் கைகூடும். தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
லாப ஸ்தான கேதுவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக லாபம் பெறுவீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை, முறைப்படி அனுகூலம் தரும் தலங்களில் செய்தால் மேலும் நன்மை கிடைக்கும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்
8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு சஞ்சரிக்கிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு குறையும். கூட்டாளிகளின் மீது நம்பிக்கை ஏற்படாது. அனுபவஸ்தர்களின் ஆலோசனை அவ்வப்போது கைகொடுக்கும்.
8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். இந்த சனியின் வக்ர காலத்தில் உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணவிரயங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.
சனிப்பெயர்ச்சி காலம்
20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இக்காலத்தில் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் ஏற்படுகிறது. எனவே எதையும் கொஞ்சம் யோசித்துச் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்கலாம். சனி உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதி என்பதால், வரும் மாற்றங்கள் நல்ல மாற்றமாகவே இருக்கும். நிலம் வாங்குவது, திருப்பணியில் ஆர்வம் உண்டாகும்.
குருப்பெயர்ச்சி காலம்
1.5.2024 அன்று ரிஷப ராசிக்கு செல்லும் குரு, 7-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசியையும், 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகிறார். வருங்காலம் சிறப்பாக அமையும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் வசந்தம் வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் வெற்றி நடை போடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார நிலை உயரும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கணவன் - மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் பணி உயர்வு கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
பஞ்சம ஸ்தான ராகுவால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நடைபெறவும், லாப ஸ்தான கேதுவால் தொழில் வளம் சிறப்பாக அமையவும், இல்லத்து பூஜையறையில் விநாயகரை வைத்து வழிபடுங்கள்.