ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை
மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் வியாழன் பலம்பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிப் பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
சிம்ம - புதன் சஞ்சாரம்
ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான அவர், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நற்பலன்களையே வழங்குவார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்படும். உற்சாகத்தோடு பணிபுரியும் நேரம் இது.
கடக - சுக்ரன் சஞ்சாரம்
ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துத் தகராறு மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினை இழுபறி நிலையில் இருக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலப் பாதிப்புகளும், மனக்கசப்புகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் இடமாற்றம், ஊர்மாற்றம் வந்து சேரும்.
10-ம் இடத்திற்கும் அதிபதியாக குரு விளங்குவதால், தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. மனக்குழப்பம் அதிகரிக்கும் நேரம் இது.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நேரம் இது.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து வராகரை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 22, 23, 26, 27, ஆகஸ்டு: 6, 7, 8, 11, 12மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உங்கள் ராசியைப் பார்க்கும் சனி வக்ரம் பெற்றிருப்பதால் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும். உடல் நலம் சீராகும். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் அமைதி காண இயலும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகள் உண்டு. பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானமும் வந்துசேரும்.