14.4.2023 முதல் 13.4.2024 வரை
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
கனவுகள் நனவாகும்!
துவளாத மனதிற்கு சொந்தக்காரர்களாக விளங்கும் துலாம் ராசி நேயர்களே!
நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு, சோபகிருது வருடப் புத்தாண்டின் தொடக்கம் சிறப்பாகவே இருக்கின்றது. முயற்சியின் மூலம் வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடிவரும். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் கேதுவும், ஏழாம் இடத்தில் ராகுவும் இருக்கின்றார்கள். ஆறாம் இடத்தில் குரு பகவான் மீன ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றார். 'ஆறில் குரு ஊரில் பகை' என்பது பழமொழி. பகைக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்போகிறீர்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் சனி பகவான் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றா். எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. இருப்பினும் கும்பத்தில் இருந்து மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் சனி, அங்கிருந்து மீண்டும் கும்ப ராசிக்கு 20.12.2023-ல் செல்கின்றார். எனவே பூர்வீகச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகல வழிபிறக்கும். அண்ணன், தம்பிகளின் உறவு சீராகி பாகப்பிரிவினைக்கு வித்திடும்.
இடையில் 3 முறை சனி-செவ்வாயின் பார்வை ஏற்படுகின்றது. முரண்பாடான கிரகங்களின் பார்வை என்பதால் அதுபோன்ற நேரங்களில் கொஞ்சம் கவனமாகவே செயல்பட வேண்டும். வம்பு, தும்புகள் வாசல் தேடி வரலாம். சரளமான பொருளாதார நிலை சரிவை நோக்கிச் செல்லலாம்.
8.10.2023-ல் மீன ராசிக்கு ராகு செல்கின்றார். அதே சமயம் உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த கேது, கன்னி ராசிக்கு பின்னோக்கிச் செல்கின்றார். இந்த மாற்றங்களின் அடிப்படையில் தான் உங்களுக்கு பலன்கள் அமையப் போகின்றது.
உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்திகள் நடைபெற்றால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். அல்லாத பட்சம் திசாபுத்தி பலமிழந்து இருந்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தக் காரியம் முடிவடையாது. எனவே அதுபோன்ற நேரங்களில், யோகபலம் பெற்ற நாளைத் தேர்ந்தெடுத்து வரம் தரும் தெய்வங்களை தேடிச் சென்று வழிபட்டால் வளர்ச்சிக்கு எந்த இடையூறும் வராது.
குருப்பெயர்ச்சி!
சித்திரை 9-ந் தேதி (22.4.2023) அன்று மேஷ ராசிக்கு குரு பகவான் வருகின்றார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் வரும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகமாக இருந்தாலும் அதன் பார்வைக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கிய தொல்லைகள் நீங்கும்.
சகாய ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தோள்கொடுத்து உதவும் நண்பர்கள் வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வர். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்துவீர்கள். வீண் விரோதங்களில் இருந்து விடுபடும் வாய்ப்பும், வெற்றிச் செய்திகளை கேட்கும் சூழலும் இனி அமையும்.
லாப ஸ்தானத்தைக் குரு பகவான் பார்ப்பதால் தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். திருமணப் பேச்சுக்கள் முடிவடையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் உங்களைத் தேடி வரலாம்.
கும்பச்சனி!
கிரகங்களில் வலிமை வாய்ந்தவர் சனி பகவான். வருடத் தொடக்கத்திலேயே அவர் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். கும்ப ராசி சனிக்குச் சொந்த வீடாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பூர்வ புண்ணியத்தின் பலனாக கிடைக்க வேண்டிய அனைத்து யோகங்களும் வந்து சேரும். சொத்துக்களால் லாபம், சொந்தங்களால் மேன்மை என அத்தனையும் கிடைக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடுவது, அவர்களின் மேற்படிப்பிற்கான ஏற்பாடுகள் நிறைவேறுவது போன்றவை நடக்கும் நேரமிது. விரும்பிய படியே தொழிலும், பொருளாதாரமும் அமையும்.
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரமும் பெறுகின்றார். பின்னர் 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்தும் வக்ரம் பெறுகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். இந்த வக்ர காலத்தில் சொத்துக்களாலும், சொந்தங்களாலும் பிரச்சினை ஏற்படும். வெற்றிக்குரிய செய்திகளை எதிர்பார்த்திருந்த உங்களுக்கு வேறுவகையான செய்திகள் வரலாம். அத்தனைக்கும் மேலாக ஆரோக்கியத்தில் தொல்லை, அலுவலகப் பணியில் குழப்பம், தொழில் பங்குதாரர்களால் இடையூறு நடைபெற்று மனக்கலக்கத்தை உருவாக்கும். இக்காலத்தில் சனிக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது.
ராகு-கேது பெயர்ச்சி!
8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த கேது விலகுவது யோகம் தான். 6-ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் 'அஷ்டலட்சுமி யோகம்' உருவாகும் என்பர். எனவே பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடி அகலும். புதிய திருப்பங்கள் பலவும் காண்பீர்கள். தொழில் சூடுபிடிக்கும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வாகன யோகம் உண்டு.
விரய கேதுவின் ஆதிக்கத்தால் விரயங்கள் அதிகரித்தாலும், ஆன்மிகப் பணிக்கும் அள்ளிக்கொடுக்க முன்வருவீர்கள். முன்னோர் கட்டிவைத்து சிதிலமடைந்த கோவில்களை முறையாகப் பராமரிக்கும் எண்ணம் கைகூடும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் யோகம் கிட்டும். உத்தியோகத்தில் நினைத்த இடத்திற்கு மாறுதலும், ஊதிய உயர்வும் கூட வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். ராகு-கேதுக்களால் நற்பலன்களை மேலும் பெற இதுபோன்ற காலங்களில் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில், அனுகூல ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது.
வளர்ச்சி தரும் வழிபாடு!
புத்தாண்டில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வர வியாழக்கிழமை தோறும் குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள பட்டமங்கலம் சென்று திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வாருங்கள்.
பெண்களுக்கான பலன்கள்!
இந்தப் புத்தாண்டின் வருடத் தொடக்கத்தில் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வருமானப் பற்றாக்குறை அகலும். வாழ்க்கைத் துணைக்கும் வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். பொருளாதாரத்தில் இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். உங்கள் பெயரிலேயே அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு ஜென்ம கேது விலகியதும் நன்மைகளை அதிகம் எதிர்பார்க்கலாம். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும். வெளியூர்ப் பயணங்களால் வெகுமதி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு இனிமை தரும் இடமாற்றங்களும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் உண்டு.
குரு-சனி வக்ரம்!
12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைகிரகம் என்பதால் அதன் வக்ர காலத்தில் வளர்ச்சி கூடுதலாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். தொழில் வளர்ச்சியும், வரவில் திருப்தியும் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டி மகிழ்வீர்கள். அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமைந்து அதிகாரப் பதவியும் வந்து சேரும். இதுவரை நீங்கள் எதிர்பார்த்து நடைபெறாது இருந்த காரியங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலங்களில் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிட்டாலும் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் அதை எதிர்கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். ெவளிநாட்டு முயற்சி கைகூடும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவர். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.