பில்லி சூன்யம் அகற்றும் மாசாணியம்மன்

பொதுவாக அம்பிகையின் தோற்றம் எல்லாக் கோவில்களிலும் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியம்மன் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் இருக்கின்றாள்.

Update: 2024-04-26 10:13 GMT

பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமலையில் சேத்துமடை சாலையில் நுழைவு வாயில் கொண்டு உப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில்.

தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போலவே கொங்கு நாடும் வரலாற்று சிறப்புடையது. கொங்கு நாடு தமிழகத்தின் மேற்கு பகுதியாக விளங்குகிறது. இதன் எல்லைகள் வடக்கே தலைமலை, தெற்கே வைகாவூர் என அழைக்கப்படும் பழனி, மேற்கே வெள்ளிங்கிரி, கிழக்கே குளித்தலை முதலியன.

கொங்கு நாட்டின் தென் பகுதியான ஆனைமலை சங்க காலம் தொட்டு சிறந்து விளங்கும் புண்ணிய பூமி. இங்கு யானைகள் அதிகம் உள்ளதால் இப்பகுதிக்கு இப்பெயர் வந்தது. இந்த ஊரில் உப்பாற்றங்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அன்னை மாசாணியம்மன்.

இங்கு அன்னை மயான தேவதையாய் 17  அடி நீளத்தில் சயன கோலத்துடன் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலது கரத்தில் திரிசூலமும் உடுக்கையும், இடது கரத்தில் அபாளம், நாக ஆபரணமும் அணிந்து உள்ளாள். நெற்றியில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தல வரலாறு

ஆனைமலை நாட்டை சங்க காலத்தில் நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவன் ஒரு கொடுங்கோலன். இவன் தனது ஆழியாற்றங்கரையில் இருந்த தனது தோட்டத்தில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த மரத்தின் கிளைகளையோ காய்களையோ கனிகளையோ எவரும் பயன்படுத்தக் கூடாது என்பது அவனது ஆணை. மீறி பயன்படுத்துபவர்கள் அரச தண்டனைக்கு உரியவர்கள் என்றும் ஆணை பிறப்பித்திருந்தான்.

ஒரு நாள் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு தனவந்தரின் மகளான கன்னிப் பெண் ஒருத்தி தன் தோழிகளுடன் ஆழியாற்றில் நீராட வந்தாள். அப்போது அந்த மாமரத்தில் இருந்து தானாகவே உதிர்ந்து ஒரு மாங்கனி கீழே விழுந்தது. அந்த இளம்பெண் அந்த கனியை எடுத்து உண்டு விட்டாள்.

இதை கண்ட காவலாளி ஒருவன் மன்னனிடம் போய் செய்தியை சொன்னான். உடனே மன்னன் அந்த இளம் பெண்ணை அரச சபைக்கு இழுத்து வரும்படி ஆணையிட்டான்.

இந்த தகவல் அறிந்து அந்த பெண்ணின் தந்தை அரசவைக்கு ஓடி வந்தான். தன் மகள் தெரியாது செய்த தவறை மன்னிக்கும்படி மன்னனிடம் வேண்டினான். பதிலுக்கு அந்தப் பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தால் செய்த சிலையும் 81 ஆண் யானைகளையும் தருவதாக மன்னனிடம் மன்றாடினான். ஆனால் மன்னன் மனம் இரங்கவில்லை. அந்த இளம்பெண்ணை கொலை செய்து விடும்படி ஆணையிட்டான்.

மாசாணியம்மன்

கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணை மயானத்தில் சமாதி படுத்தி அதன் மீது அந்த பெண் போன்ற ஓர் உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபட்டார்கள் மக்கள். மயானத்தில் சயனித்த நிலையிலிருந்த அந்த பெண் பின்னர் 'மாசாணி' என அழைக்கப்பட்டாள். பெயர் தெரியாத அந்த ஆனைமலை இளம்பெண், பின்னர் கொங்கு நாடு முழுவதும் வழிபடும் மாசாணியம்மன் ஆனாள். அன்னை பராசக்தி தன் சக்தியை கொடுக்கவே, பராசக்தியின் வடிவாய் மாசாணியம்மன் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

ஆனைமலை ஊருக்கு மேலே 'பிங்கொனாம் பாறை' என்ற பெயரில் ஒரு பாறை உள்ளது. இதுவே அந்த பெண் தண்டிக்கப்பட்ட இடம் என்று சொல்லப்படுகிறது.

அம்மனின் சிறப்பு

மாசாணியம்மனின் சிறப்புக்கு காரணம் மூல உருவ அமைப்பின் தனித் தன்மையே ஆகும். பொதுவாக அம்பிகையின் தோற்றம் எல்லாக் கோவில்களிலும் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும்.

ஆனால் மாசாணியம்மன் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் இருக்கின்றாள். இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். இந்த அம்பாளை பார்க்கின்ற யாரும் பொய் சொல்லமுடியாது. வஞ்சகம் நினைக்க முடியாது.

பில்லி சூன்யம், மந்திரம், ஏவல் போன்ற பகைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து நிவாரணம் பெற இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகின்றனர். அன்னையிடம் மனம் உருக வேண்டி நிவாரணமும் பெறுகின்றனர்.

பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், கள்வர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய் அரைத்து நீதி கல்லில் பூசி விடுகிறார்கள். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை.

இங்கு அம்மனின் பிரசாதமாக கறுப்புக் கயிறு வழங்கப்படுகிறது. அக்கயிற்றை கட்டிக் கொண்டால் தீவினை வளராது என்றும் துன்பம் தீர்ந்து போகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

அம்மனின் திருவுருவத்திற்கு 4½ மீட்டர் நீளத்தில் புடவை சாத்துவதும், எலுமிச்சை பழ மாலை அணிவிப்பதும் இங்கு மிக விசேஷம்.

இங்கு வரும் மக்கள் தங்களது கோரிக்கை நிறைவேறுவதற்காக அன்னையிடம் வேண்டுதல் சீட்டு கொடுத்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த சீட்டு 90 நாட்கள் அம்மனின் கருவறையில் இருக்கும். இந்த வேண்டுதலால் தங்கள் பிரார்த்தனை பலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

திருமணம் ஆன பெண்கள் ஒரு மஞ்சள் கயிற்றில் துண்டு மஞ்சளை கட்டி அன்னையை வேண்டி கொடி கம்பத்தில் மூன்று முடிச்சி போடுகின்றனர். இதனால் அவர்களது மாங்கல்யம் பலம் பெரும் என்பது சுமங்கலிப்பெண்களின் நம்பிக்கை.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீபாவளி, கார்த்திகை, தை பொங்கல், ஆடி வெள்ளி, நவராத்திரி போன்ற நாட்கள் இங்கு திருவிழா நாட்களே.

இங்கு தை மாதம் அமாவாசை அன்று கொடி ஏற்றத்துடன் குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா இங்கு மிகவும் பிரபலம். புதினெட்டாம் நாள் அம்மனுக்கு திருமஞ்சன நீராட்டுடன் திருவிழா இனிதே நிறைவுபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்