உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்

உலக பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று உருவான கொரோனா பாதிப்பால் மிக தலைகீழான நிலைக்கு சென்று விட்டது.

Update: 2022-11-06 19:49 GMT

உலக பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று உருவான கொரோனா பாதிப்பால் மிக தலைகீழான நிலைக்கு சென்று விட்டது. எண்ணற்ற உயிரிழப்புகள் மட்டுமல்லாமல், உடல் நல பாதிப்பு, உற்பத்தி வீழ்ச்சி, வேலையிழப்பு, கதவடைப்பு, வர்த்தக சரிவு என்று எல்லா முனைகளிலும் பெரிய பின்னடைவை உலகம் சந்தித்தது. இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வழக்கமான பாதைக்கு, எதிர்பார்க்கும் வேகத்தில் உலகத்தின் பயணம் தொடங்கவில்லை. இந்த கொடிய கொரோனா முதலில் உருவான இடம் சீனாவில் உள்ள வூகான் நகரம்தான். இது எப்படி உருவாகியது என்பது குறித்து எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடந்தாலும் இன்னும் திட்டவட்டமான ஒரு முடிவு கிடைக்கவில்லை. என்றாலும் சோதனைகூடத்தில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த ஒரு வவ்வால் மூலம் பரவியதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக இந்த தொற்று 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வூகான் நகரில் கண்டறியப்பட்டது. அப்போதே இதன் பரவல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒட்டு மொத்த உலகமும் விழித்துக்கொண்டது. எல்லா நாடுகளும் தடுப்பூசி போடுவதில் மிக தீவிரம் காட்டின. இந்தியாவுக்குள் இந்த கொரோனா வூகான் நகரில் மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த ஒரு கல்லூரி மாணவி தன் சொந்த மாநிலமான கேரளாவுக்கு வந்த நிலையில், அவருக்கு 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி கொரோனா பாதிப்பு இருந்தது. தமிழ்நாட்டுக்கு காஞ்சீபுரத்துக்கு மஸ்கட்டில் இருந்து வந்த ஒருவருக்கு 2020-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோல தமிழ்நாட்டில் முதல் தடுப்பூசி 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி போடப்பட்டது. அலை அலையாய் 3 அலைகளாக கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்தது. ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி மட்டும் 30 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது வெகுவாக குறைந்து நேற்று 114 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற ஆறுதலான செய்தியால், இனி படிப்படியாக குறைந்து ஓடிவிடும் என்று எண்ணவைத்த நிலையில், இப்போது மீண்டும் ஒரு உருமாறிய தொற்று பி.எப்.7 ஒமைக்ரான் என்ற பெயரில் அதே வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வூகான் உள்பட 28 நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவில் உள்ள சென்சூ நகரில் இருக்கும் 2 லட்சம் பேர் பணிபுரியும் ஐபோன் தொழிற்சாலையில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகமே இப்போது அச்சத்தால் உறைந்து போய் நிற்கிறது. தமிழ்நாட்டில் இந்த உருமாறிய கொரோனா நுழையவில்லை என்று மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். என்றாலும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு கவசமான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுதல் ஆகியவற்றில் தொய்வடைந்துவிடக்கூடாது. அரசும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த விளம்பரம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசிகள் போடுவது மீண்டும் வேகப்படுத்தப்பட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்