புரோ கபடி இறுதிப்போட்டி: டெல்லி-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை
கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெங்களூரு,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் கடந்த டிசம்பர் 22-ந் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லி அணிகள் முறையே முதல் 2 இடங்களை பிடித்து நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. அரைஇறுதியில் பாட்னா பைரட்ஸ் உ.பி.யோத்தாவையும் (38-27), தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் (40-35) வெளியேற்றி இறுதிப்போட்டியை எட்டின. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி-பாட்னா அணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முந்தைய மூன்று முறையும் கோப்பையை உச்சிமுகர்ந்த அந்த அணி மீண்டும் அதே வித்தையை வெளிப்படுத்துமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அணியில் சச்சின் (163 புள்ளிகள்) ரைடிலும், சியானி (87 புள்ளிகள்) டேக்கிளிலும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்கள். அவர்களையே அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.
தொடர்ந்து 2-வது முறையாக இறுதி சுற்றுக்குள் வந்துள்ள ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணியில், நம்பிக்கை நட்சத்திரமாக நவீன் குமார் (194 புள்ளிகள்) வலம் வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்துடன் ஆடிய அவர் அரைஇறுதியில் 14 புள்ளிகள் குவித்து கலக்கினார். இதே போல் இறுதிப்போட்டியிலும் அவர் ஆதிக்கம் செலுத்தினால் டெல்லி அணியின் கோப்பை கனவு நனவாகுவதில் சிக்கல் இருக்காது. நடப்பு தொடரில் இரண்டு லீக் ஆட்டங்களிலும் டெல்லி அணி (32-29 மற்றும் 26-23) பாட்னாவை பதம் பார்த்துள்ளதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். அதே சமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாட்னா வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். ‘எங்களது தடுப்பு ஆட்டத்தில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப்போட்டியில் நங்களே வெற்றி பெறுவோம்’ என்று பாட்னா அணியின் பயிற்சியாளர் ராம் மேஹர்சிங் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இறுதி யுத்தத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. போட்டியில் மகுடம் சூடும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக கிடைக்கும்.