நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 126 ரன்களில் சுருண்ட வங்காளதேச அணி
முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்காளதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கேப்டன் டாம் லாதமின் 252 ரன்கள் உதவியுடன், 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசஅணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷத்மன் இஸ்லாம் (7), முகம்மது நைம் (0), நஜ்முல் ஹசேன் (4), கேப்டன் மொமினல் ஹக் (0), லிட்டன் தாஸ் (8) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, வங்காளதேச அணி 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது.
பின்னர் யாசிர் அலி 55 ரன்களும், நருல் ஹசன் 41 ரன்களும் எடுத்து அணியை கொஞ்சம் சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தற்போது வங்காளதேச அணி 395 ரன்கள் பிந்தங்கி உள்ளதால், நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.