தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் அருகே தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகிகள் கே.ஆர். சுப்பிரமணியன், டி. முரளி உள்பட பலர் தலைமை தாங்கினர். பரசுராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.சிம்புதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், 2021-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த பேரணியில் விவசாயிகள் மீது கார் மோதி 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான மத்திய மந்திரி அஜய்மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்கம் செய்திட வேண்டும், வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி, நகர்ப்புறத்திலும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.