இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஆக்கி போட்டி - பெர்த்தில் இன்று நடக்கிறது
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கிறது.
பெர்த்,
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா ஆக்கி அணிகள் இடையிலான முதலாவது போட்டி பெர்த்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 5-வது இடத்தில் உள்ளது.
வலுவான இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. 2013-ம் ஆண்டில் இருந்து இவ்விரு அணிகளும் 43 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 28 ஆட்டத்திலும், இந்தியா 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.