உலகக் கோப்பை தகுதிசுற்று; ஸ்காட் எட்வர்ட்ஸ் போராட்டம் வீண்...21 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை...!
நெதர்லாந்து அணி தரப்பில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டம் இழக்காமல் 67 ரன்கள் எடுத்தார்.
புலவாயோ,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிசுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-3 இடங்களை பிடித்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'பி' பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.
சூப்பர்சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது எதிர்பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே சமயம் தங்கள் பிரிவில் இருந்து வந்த அணிகளை ஏற்கனவே லீக்கில் வீழ்த்தி இருந்தால் அதற்குரிய புள்ளி சூப்பர்சிக்ஸ் சுற்றில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வகையில் ஜிம்பாப்வே, இலங்கை தலா 4 புள்ளிகளுடன் சூப்பர்சிக்சை கம்பீரமாக அடைந்து இருக்கின்றன. சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியை எட்டுவதுடன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் தகுதி பெறும்.
இதில் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக நிசாங்கா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினர். இதில் நிசாங்கா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
இதையடுத்து கருணாரத்னேவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் மெண்டிஸ் 10 ரன், அடுத்து வந்த சதீரா சமரவிக்ரமா 1 ரன், அசலாங்கா 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கருணாரத்னே 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 67 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து டி சில்வா, தசுன் ஷனகா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதில் ஷனகா 5 ரன், அடுத்து வந்த ஹசரங்கா 20 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து தீக்ஷனா டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய டி சில்வா அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இலங்கை அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தனஞ்செயா டி சில்வா 93 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது.
நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ டவுட் ஆகியோர் முறையே டக் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வெஸ்லி, பாஸ் டீ லீட் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வெஸ்லி 52 ரன்னும், பாஸ் டீ லீட் 41 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய தேஜா டக் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் களம் இறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால் மறுமுனையில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதிவரை களத்தில் நின்ற எட்வர்ட்ஸ் 67 ரன்கள் குவித்தும் அணியை வெற்றி பெற வைக்க இயலவில்லை.
இறுதியில் நெதர்லாந்து அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 192 ரன்னுக்கு ஆல் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.