உலகக் கோப்பை: டோனி- ஜடேஜாவின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து ஜோடி
சைப்ரண்ட் ஏங்கல் பிரெக்ட் மற்றும் வான் பீக் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
லக்னோ,
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடைபெற்ற 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. விக்ரம்ஜித் சிங் (4), மேக்ஸ் ஓடவுட் (16), அக்கர்மேன்(29), டி லீட்(6), நிதமானுரு (9), கேப்டன் எட்வர்ட்ஸ் (16), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நெதர்லாந்து அணி 91 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனை தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஆகியோர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இதனால், நெதர்லாந்து அணி நல்ல ஸ்கோரை எட்டியது. ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், வான் பீக் 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஜோடி இந்த போட்டியில் புதிய சாதனையை படைத்தனர்.
இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்தனர். மேலும் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு டோனி- ஜடேஜா 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த சாதனையை சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி முறியடித்துள்ளது.,