உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: பூரன், ஹோப் சதம் - வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபாளத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
ஹராரே,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் புலவாயோ மற்றும் ஹராரே நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரக அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் சிக்ஸ் மோதலுக்கு பிறகு அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதுடன் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் தகுதி பெறும்.
தகுதி சுற்றில் ஹராரேயில் நேற்று நடந்த 9-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, நேபாளத்தை சந்தித்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த நேபாள கேப்டன் ரோகித் பாடெல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்னுக்குள் கைல் மேயர்ஸ் (1 ரன்), ஜான்சன் சார்லஸ் (0), பிரான்டன் கிங் (32 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷாய் ஹோப்பும், நிகோலஸ் பூரனும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டு வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தனர். அபாரமாக ஆடிய இருவரும் ஒரே ஓவரில் தங்களது சதத்தை நிறைவு செய்து அசத்தினர். தனது 2-வது சதத்தை அடித்த பூரன் 115 ரன்களில் (94 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். 15-வது சதத்தை ருசித்த ஷாய் ஹோப் 132 ரன்களில் (129 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 339 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய நேபாள அணி 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. நேபாள அணியில் அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 63 ரன்கள் (93 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், கீமோ பால், அகில் ஹூசைன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். வெஸ்ட் இண்டீசுக்கு இது 2-வது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை நெதர்லாந்து அணி 43.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேஜா நிதாமனுரு (58 ரன்), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (67 ரன்) அரைசதம் அடித்தனர். 2-வது ஆட்டத்தில் ஆடிய நெதர்லாந்துக்கு இது முதலாவது வெற்றியாகும். அமெரிக்காவுக்கு விழுந்த 3-வது அடியாகும்.
இன்றைய லீக் ஆட்டங்களில் ஓமன்-இலங்கை, ஸ்காட்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் (பகல் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.