உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து...!
நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் அடித்தனர்.
ஐதராபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய கான்வே இந்த ஆட்டத்தில் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து வில் யங்குடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
அணியின் ஸ்கோர் 144 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. அதிரடியாக ஆடிய வில் யங் 70 ரன்னும், ரவீந்திரா 51 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து டாம் லாதம், டேரில் மிட்செல் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மிட்செல் 48 ரன், அடுத்து களம் இறங்கிய பிலிப்ஸ் 4 ரன், சாம்ப்மென் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து டாம் லாதமுடன் மிட்செல் சாண்ட்னெர் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லாதம் அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. இதையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது.