முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபாரம்

அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகி விருது பெற்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அமன்ஜோத் கவுர் பெற்றார்.

Update: 2023-01-21 00:25 GMT

Image Courtesy : @BCCIWomen twitter

ஈஸ்ட் லண்டன்,

8-வது 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் ஈஸ்ட் லண்டனில் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அறிமுக வீராங்கனை அமன்ஜோத் கவுர் ஆட்டம் இழக்காமல் 41 ரன்னும் (30 பந்து, 7 பவுண்டரி), விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா 35 ரன்னும், தீப்தி ஷர்மா 33 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (7 ரன்) உள்ளிட்ட வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்து அடங்கியது. இதனால் இந்தியா 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும், தேவிகா வைத்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அமன்ஜோத் கவுர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகி விருது பெற்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இன்று நடைபெறும் 2-வது லீக்கில் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்