ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து...கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்..!
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.
கேப்டவுன்,
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 343 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 109 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் 58 ரன், மார்கோ ஜேன்சன் 32 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினர். இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிம்பெர்லியில் இன்று (மாலை 4.30 மணி) நடக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றுள்ள இங்கிலாந்து அந்த மோசமான பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் அடையுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.