உலகக்கோப்பை அரையிறுதியில் யார் யார்?; 'சின்ன தல' ரெய்னாவின் கணிப்பு!
உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
புது டெல்லி,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;-
இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அல்லது இலங்கை ஆகிய 4 அணிகள் செல்ல வாய்ப்பு உள்ளது. அதில் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக குல்தீப் யாதவ் திகழ்வார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் . மேலும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.